Tuesday 20 June 2017

மணிமேகலை9

9.மணிமேகலை
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி



சேலம் -7- (தன்னாட்சி)

 மிக அழகிய ஒரு மாளிகையில் பட்டாடை உடுத்தி, நகைகள் அணிந்து ஒரு அரசிக்குரிய தோரணையுடன் மணிமேகலை தன் தோழியரோடு உரையாடிக் கொண்டிருந்தாள்.
‘மன்னர் வரும் வேளையாயிற்று. சரி எல்லோரும் புறப்படுங்கள்‘ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே மன்னன் தோரணையில் அவள் கணவன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.
‘இலட்சுமி‘ என்றழைத்தபடி, உள்ளே வந்து கொண்டிருந்தான்.
மணிமேகலை திகைத்தாள்.
தான் மணிமேகலையா லட்சுமியா?
இது என்  நிகழ்காலமா? ஒருக்கால் நான் கனவு காணும்  என் எதிர்காலமா? அப்படி ஒரு விதி எனக்கு இருக்கிறதா?
நான் ஒரு மன்னனை மணந்து  அரசி போல அரியணை ஏறி எதிர்காலத்தில் வாழ்வேனா? ஆனால் தற்போது இலட்சுமி என்று ஏன் அவன் என்னை அழைக்கிறான்?
இது என் நிகழ்காலமா? அவள் சற்று குழம்பினாள்.
அருகில் வந்தஅவள் கணவன், "இலட்சுமி,சங்க தருமர்  என்ற முனிவர் நம் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார். அவரை விருந்துண்ண அழைத்திருக்கிறேன். உடனடியாக அவருக்கேற்ற உணவை நம் பரிசாகரிடம் செய்யச் சொல். நீயே முன் நின்று பரிமாற வேண்டும். மிகுந்த ஆசாரமும், சீலமும் உடையவர் அவர் . நம் நாட்டிற்கு அவர் வந்திருப்பது நாம் செய்த புண்ணியம். எந்தத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது. நீதான் அனைத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். தவ முனிவர்களை எப்படி வரவேற்கவேண்டும் என்று மன்னனின் மகளாகிய உனக்குத் தெரியுமல்லவா?"
மன்னனின் மகளா? தானா? மன்னனின் மனைவி என்று தானே சற்றுமுன் ஒரு கற்பனை வந்தது.
மணிமேகலை குழம்பிப் போனாள்.
ஆனால் குழம்பிக்கொண்டு நிற்க அவள் கணவன் நேரம் தரவில்லை,
சங்கதருமர் என்ற பௌத்த துறவியை எதிர்கொண்டு  வரவேற்க அவளை அழைத்துச் சென்றான்.
சங்கதருமரைப் பார்க்கும்போது இன்னது என்று விவரிக்கமுடியாத சாந்தி அவள் உள்ளத்தில் நிலவியது.
மழிக்கப்பட்ட தலையுடன் காவி உடையணிந்து, கண்களில் பெருகும் கருணையும், ஞானம் வீசும் கண்களும், புன்னகை தவழும் இதழ்களுமாக சங்கதருமர் உள்ளே நுழைந்தார். அவருக்குரிய பணிவிடைகளை இருவருமே முன் நின்று செய்தனர். உதயகுமரன் ஒருவித பதட்டத்துடனே இருந்தான்.
பணிவிடைகளில் எந்தத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். உண்ணாநோன்பியான அவர் தன் இல்லத்திற்கு வந்ததே மிகப்பெரிய பாக்கியம் என்று மகிழ்ந்திருந்தான். விருந்துண்ண சம்மதிப்பாரா மறுத்துவிடுவாரா என்று நினைத்து நினைத்து என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.
அவர்  இருவரும் விழுந்து காலைத் தொட்டுவணங்கினர். சங்கதருமர், "இராகுல மன்னனே, நீடூழி வாழ்வாயாக. உன் ஆட்சியில் மக்கள் எவ்வித குறையுமில்லாமல் நீடூழி வாழட்டும்" என்று வாழ்த்தினார்.
இராகுலனா? என் கணவர் பெயர் இராகுலனா?
"தாங்கள் விருந்துண்டு எங்களை மகிழ்விக்க வேண்டும்." தயக்கத்துடனே இராகுலன் வணங்கி அவரிடம் தன் கோரிக்கையை வைத்தான்.
"நான் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே உண்ணும் பழக்கமுடையவன். நீ அழைத்த நேரத்தில் நான் உண்ணும் காலமும் நெருங்கிவிட்டது. உன்னுடைய அன்பும் உன் மனைவியின் பண்பும்  என்னை நெகிழவைத்துவிட்டது. அப்படியே ஆகட்டும்" என்றார்.
இராகுலன் மிக்க மகிழ்வோடு மீண்டும் அவர் காலில் விழுந்து வணங்கினான்.
"இலட்சுமி ஏற்பாடுகளை விரைந்து செய்."
பட்டினால் மூடப்பட்ட உணவு மேசை தயாராக இருந்தது. சேடியர் கொண்டு வந்து தந்த தலை வாழை இலையைக் கொண்டு வந்து பட்டு மேசையின் மேல் முனிவருக்கு உரிய மரியாதையோடு விரித்து வைத்தாள். முதலில் இனிப்பை வைத்தாள். அவருக்காகவே தேர்ந்தெடுத்து சமைக்கப்பட்ட கறிகாய்களைச் சேடியர், வரிசையாக கையில் வைத்திருக்க இலட்சுமி ஒவ்வொன்றாகப் பரிமாறினாள்.
முனிவரும் உண்ண அமர்ந்து விட்டார். அவர் இனிப்பையும் கறிகாய்களையும் தொடவே இல்லை. 
"சோறும் தயிரும் மட்டும் கொண்டு வாருங்கள்" என்றார்.
சேடியர் அடுக்களைக்குச் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள் தான்.
 நெடுநேரமாகியும் வரவில்லை. இலட்சுமி என்ன ஆயிற்றோ என்று கவலை கொண்டு தானே அடுக்களைக்குச் சென்றாள். அவளும் வராத்தைக்கண்டு கடும் கோபத்துடன் இராகுலன் அடுக்களைக்குச் சென்றான்.
அங்கு அனைவரும் கையைப் பிசைந்தபடி மிரள மிரள விழித்தபடி நின்றிருந்தனர். பரிசாரகன் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான். 
அங்கு கீழே சோற்றுப்பானை உடைந்து சோறெல்லாம் சிதறிக் கிடந்தது.
பரிசாரகன் முனிவருக்கு சமைத்த சோற்றுப் பானையைப் பதட்டத்தில்  கீழே தவற விட்டதால்அனைத்து சோறும் வீணாகி விட்டது. முனிவர் உண்ண அமர்ந்துவிட்ட நிலையில் யாவரும் செய்வதறியாது அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
இராகுலன் கடும் கோபத்தில்,தன்னை மறந்தான். வாளை உருவினான்  அஞ்சி நடுங்கும்  பரிசாரகனை வாளால் வெட்டிச் சாய்த்தான். சோற்றுக் குவியலில் எல்லாம் குருதி சிந்தி சோறே  இரத்தமயமாகி விட்டது.
செய்தியறிந்த முனிவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். 
விருட்டென்று தன் இருக்கையை விட்டு எழுந்தார் ,
"என் காரணமாக ஏற்பட்டது  இந்த தீவினை இதனைப்  போக்கிக் கொள்ள சாகும் வரை உண்ணா நோன்பிருப்பதே எனக்கான ஒரே அறம் வழி" என்றபடி அங்கிருந்து அகன்றார்.
பரிசாரகன் அறியாமல் செய்த தவறுக்கு தான் இழைத்த பெருந் தீங்கை நினைத்து இராகுலன் மனம் வருந்தி நின்றான். முனிவர் உண்ணா நோன்பிருந்து இறப்பதற்கு முடிவெடுத்தற்கு தன் அவசரப்புத்தியே காரணம் என எண்ணினான்.
தான் மன்னனாக இருப்பதற்கே தகுதியற்றவனா? எனத் தனக்குள்ளேயே நினைத்து மருகினான். மனப்புழுக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் தவித்தான்.
அமைச்சர்களின் ஆலோசனைப்படி, அரச பாரத்திலிருந்து சிறிது நாள் விடுபட்டு ஓய்வெடுக்க மலர்ச் சோலைகள் நிறைந்த காட்டில் தன் மனைவியோடு தஞ்சம் புகுந்தான்.
ஆனால் அவனுடைய தீவினை அவனைத் தொடர்ந்தது. அச்சோலையில் இராகுலன் திட்டி விடம் தீண்டியாது. அவன்  இறந்து போனான்.  இலக்குமி தன் கணவன் தன் கண்முன்பாகவே வாயில் நுரை தள்ளி இறந்ததைக் கண்டாள்.  அவனின்றி  தான் வாழவிரும்பவில்லை எனத் தோழியரிடம் தெரிவித்தாள். 
கணவன் இறந்த பெண்கள் எரியூட்டி தீயில் இறங்கும் சடங்கை முறைப்படி செய்வித்து தரும்படி ஆணையிட்டாள்.  விறகுகளை அடுக்கி கணவன் சடலமருகில் தானும் தவக் கோலத்தில் அமர்ந்தாள். 
 இலக்குமியாகத் தன்னை உணர்ந்த மணிமேகலைக்கு உடல் தீப்பற்றி எரிவது போல ஒரு வெப்பம்  உணர்ந்தாள்  
உடல் உதறி உதறிப் போட்டது. தன்னைச் சுற்றி வெப்பத்தை உணர்ந்தாள். தன் கூந்தலில் சூடியிருந்த மலரும் சேர்ந்து கருகும் வாசனையை இப்போதும் நுகர்வது போல இருந்தது. 
அம்மா, என்றலறியபடியே அச்சத்துடன் கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.[தொடரும்]

No comments:

Post a Comment