Wednesday 21 June 2017

மணிமேகலை.11.

 11. மணிமேகலை
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -

டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி
சேலம் -7- (தன்னாட்சி) 
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா,

மணிமேகலை புத்த கடிகையின் முன் வந்து அமர்ந்தாள். மாதவி கூறிய புத்தரின் ஆசை பற்றிய கருத்து மனதில் எழுந்தது.

இந்த உலகில் வளமான மக்கள் ஒரு புறம். வளம்  என்பதையே அறியாத மக்கள் மறு புறம். பசித்துன்பம் ஏன் ஏற்படுகிறது? மக்கள் உழைக்காததினாலா அல்லது அவர்கள் உழைப்பை பலர் சுரண்டுவதினாலா? புகார் தான் எவ்வளவு வளமான தலை நகரம்

ஆனால் அங்கும் வறுமை தாண்டவமாடுகின்றதே. சுதமதியும் அவள் தந்தையும் இதே ஊரில் பிச்சையெடுத்திருக்கிறார்களே. சிலருடைய பேராசை பல பேருடைய வயிற்றில் மண்ணைப் போடுகின்றதே?

கருவறை முதல் கல்லறை வரை கடுகளவும் போகாதே ஒன்று பசி என்று யாராவது பாடி வைத்தானே. கரு உற்பத்தி தொடங்கி நாள் முதல் தொடரும் பசி. வாய்க்கரிசி போடும் வரை நீள்கிறது. இடையில் அளவில் மாற்றம் வருமே தவிர உணவே தேவையில்லாமல் போவது இல்லை. உடம்பெடுத்து போது பசி எடுக்கிறது. தொப்பூழ்க் கொடியில்  தொடங்கி இறப்பின் மடியில் தான் அடங்குகிறது.

ஆசை உயிரைக் கொல்லாது பிறரை வருத்தும் ஆனால் ,பசி தன்னைச் சார்ந்தவரையே கொல்லும். பசியில் உயிர் போகிறதே என்று நானே நினைத்தேனே.

பசி தான் மிகப்பெரிய பிணி. உதயகுமரன் போன்றவர்கள் மக்களின் பசிப்பணி போக்காமல் தங்களின் உடற்பசிக்கு அலைகிறார்களே.

அவளுக்கு முதன் முதலாக உதயகுமரன் மீது அருவருப்பு எழுந்தது. இந்த உலகத்தில் வசதி படைத்தவர்களுக்குக் கிடைத்த பணம் யாருக்கும் பயன்படவில்லையே. பிறருக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் யாரும் நினைப்பதில்லை. உணவையாவது கொடுக்கலாமே!

தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால்... ? புகாருக்குச் சென்று மாதவி சேர்த்து வைத்துள்ள செல்வங்களையெல்லாம், பசியில் வாடுபவர்களுக்கு உணவு கொடுப்பதற்காகப்  பயன்படுத்த வேண்டும். 

உதயகுமரனை நான் மணப்பது இயலாது. அவனிடம் என் மனம் சென்றாலும் அவனுடனான என் வாழ்க்கை என் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும்

அவனுடைய கட்டுப்பாட்டிலேயே நான் வாழ நேரிடும். அவனுக்காகவே நான் வாழ்ந்தாலும், நான் அறியாமல் தவறு செய்தால், என்னைக் கணிகை என ஒதுக்கி விலகி வைத்து விடுவான்

தாய் மாதவியைப் போல நானும் துயரம் அடைய நேரும்.எனக்குப் பிறக்கும் குழந்தைகளும் கணிகையின் வாரிசுகளாகத் தான் அறியப்படுவார்கள். இது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.

ஆனால் நான் பொதுத் தொண்டில் ஈடுபட்டு, மக்களின் பசியைப் போக்கினால் மனஅமைதியாவது கிட்டும். ஒரு கணிகையின் வாழ்வாவது நல்ல முடிவிற்கு வரும். மாதவியின் மனக்கவலை தீரும். சுதமதியையும், நல் வாழ்வு வாழ விரும்பும் கணிகையரையிம் இதில் ஈடுபடுத்தலாம். பசிப்பணி நீங்கிவிட்டால், யாரும் கணிகையாவே வாழ விரும்பமாட்டார்கள். கணிகை குலத்தையே வேரோடு இல்லாமல் செய்து விடலாம்.

பசிப்பணி எனுமொரு பாவிதானே பெண்களைத் தங்கள் சுற்றத்தாருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் பலரிடம் கையேந்த வைக்கிறது. அடுத்தவர் வாசலில் மானம் துறந்து நிற்பதற்குக் காரணமாகிறது. கல்வி கற்றவன் கூட காசுள்ளவனிடம் சென்று கால் பிடிப்பதற்குப் பசிப்பிணி தானே காரணம்.
மணிமேகலைக்கு மனதில் தெளிவு பிறந்தது. மணிமேகலை தெய்வம் தனக்கு மந்திரங்களை எதற்காகக் கொடுத்தது? நானாவது மக்களின் துயரத்தைத் துடைக்க மாட்டேனா என்ற ஏக்கத்தில் தானே?[தொடரும்]



No comments:

Post a Comment