Tuesday 22 August 2017

மணிமேகலை.20

மணிமேகலை.20


தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி சேலம் -7- (தன்னாட்சி)
ஜவாஹர் பிரேமலதா


'சுதமதி....சுதமதி.'... மாதவி உரக்க அழைத்துக் கொண்டிருந்தாள்

சுதமதி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவள் மணிமேகலை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். மணிமேகலை புத்த துறவிகளோடு சாவக நாடு சென்று இரு மாதங்கள் ஆயிற்று. எப்போது திரும்பி வருவாள் என்பது பற்றி எத்தகவலுமில்லை. மாதவி இல்லத்தில் மணிமேகலை தான் அவளுக்கு வயதொத்த தோழியாக இருந்தாள். மாதவி பெரும்பாலும் தவத்தில் மூழ்குவதும், புத்தம் தொடர்பான தகவல்களைப் படிப்பதிலும் காலம் கழித்தாள். உள்ளுக்குள் மணிமேகலை குறித்தான கவலையிருந்தாலும், அவளுடைய நன்மைக்காகத் தானே சாவக நாடு சென்றிருக்கிறாள் எனச் சமாதானப் படுத்திக் கொண்டாள். சுதமதி சென்ற பிறவியில் தன் சகோதரியாகத் தன் பிரிவைத் தாங்காது உயிர் விட்டவள் என அறிந்ததிலிருந்து அவளையும் தன் மகளாகவே கருதத் தொடங்கி விட்டாள்.

மணிமேகலையைப் பிரிந்து சுதமதி படும் துயரங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

மாதவி சுதமதியின் தோளை உலுக்கிய போது தான், சுதமதி சுய நினைவிற்கு வந்தாள். 
என்ன அப்படி ஆழ்ந்த சிந்தனை? எத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா
அப்படியா அம்மா மன்னித்துக் கொள்ளுங்கள். மணிமேகலை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கிருக்கும் போது சரியாகச் சாப்பிடவே மாட்டாள். இது பிடிக்காது. அது பிடிக்காது எனப் பாதிச் சாப்பாட்டை ஒதுக்கி விடுவாள். கப்பலில் அவளுக்கு வேண்டியது கிடைக்குமோ? சரியாகச் சாப்பிடுவாளோஎனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
சுதமதி மன்னிப்பெல்லாம் எதற்கு? நீயும் எனக்கு மணிமேகலை போலத்தான். அவள் முன்பு போல இல்லை. மணிபல்லவத் தீவில் பசியின் கொடுமையை நன்றாக அனுபவித்து அறிந்திருக்கிறாள். எனவே கிடைத்ததைச் சாப்பிட பழகியிருக்கிறாள். நீ வீணாகக் கவலை கொள்ளாதே’ 
மணிமேகலா தெய்வம் அவளைத் தூக்கிக் கொண்டு போன போது மணிமேகலையைக் காணாமல் எப்படித் துடித்தீர்கள். அந்தப் பத்து நாட்களும் நீங்கள் பட்டபாட்டை நானே அறிவேன். இப்போது இருமாதங்களாகும் எனத் தெரிந்தே அனுப்பி வைத்திருக்கிறீர்கள்.‘ 
எல்லாம் காரணமாகத்தான் சுதமதி. அவள் இப்போது புகாரில் இல்லாமலிருப்பதுதான் அவளுக்கு நல்லது‘ 
மாதவியைப் புரியாமல் பார்த்த சுதமதி, சுதமதி எதையோ நினைத்துக் கொண்டு, ‘அம்மா, உவவனத்தில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிச் சென்ற பின்பு, உறக்கம் விழித்த தான் அவளைக் காணாமல் நள்ளிரவில் ஊர்முழுதும் சுற்றி அலைந்தேன். நகர எல்லை வரை சென்று பார்த்தேன். அங்கிருக்கும் கோட்டத்தின் ஒரு தூணிலிருந்து கந்திற்பாவை சிலை திடீரென்று உயிர் பெற்று எழுந்தது. நான் பயந்து போய் அலறக் கூட மறந்து நின்றுவிட்டேன். அது என்னை, ‘அசோதர நகரத்து மன்னன் இரவிவன்மனின் மகளே!என்றழைத்தது. நான் புரியாமல் விழித்தேன். அத்தெய்வம் மீண்டும் கச்சய நகரத்து அரசன் துச்சயனின் மனைவியேஎன்றது.
அத்தெய்வம் யாரையோ நினைத்துக் கொண்டு என்னிடம் பேசுவதாக நினைத்தேன். அத்தெய்வம் அதைப் பற்றிக் கவலைப்படாமல், ‘தாரையின் உடன்பிறந்தவளே! அவள் இறந்ததை அறிந்து, அத்துயரத்தைப் பொறுக்க மாட்டாமல் யானையின் முன் மயங்கி வீழ்ந்து உயிர் விட்டவளே என்றது.
நான் மன்னனின் மகளுமல்ல, மனைவியும் அல்ல. எனக்கு உடன் பிறந்த சகோதரியாருமில்லை. நான் இறக்கவுமில்லை. இறந்து இங்குப் பேயாக வரவுமில்லை. என் தோழியைத் தேடியே இங்கு வந்தேன்என்றேன்.
ஆனால் அந்தக் கந்திற்பாவை, ‘நீ சண்பை நகரத்தில் உள்ள கௌசிகனின் மகள் என்பதை நான் அறிவேன். மாருதவேகன் உன்னை ஏமாற்றி இந் நகரத்தில் விட்டு விட்டான் என்பதும் எனக்குத் தெரியும். தற்போது தாரையுடன், வீரை என்ற பெயருடைய நீ எங்கு வசிக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும் என்றது.‘ 
என் பெயர் வீரை அல்ல. எனக்குத் தாரை என்ற பெயருடைய யாரையும் தெரியாதுஎன்றேன். அத் தெய்வம் நான் சொன்னதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. 
இன்றைக்கு ஏழாம் நாளில் நள்ளிரவில் தன் பிறப்பும் உன் பிறப்பும் உணர்ந்து, உன் தங்கையாகிய இலக்குமி திரும்ப மீண்டும் வருவாள். எனவே, வீணாக அவளை நீ தேடியலையாதேஎன்று சொல்லி மறைந்து விட்டது.
அப்போது எனக்கு ஒன்றும் பிரியவில்லை. மணிமேகலை வந்து சொல்லிய பின்பு தான் எல்லாம் புரிந்ததுஎன்றாள் சுதமதி.
ஆமாம் சுதமதி இத்தெய்வங்கள் எல்லாம் நமக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பின்னால் நடப்பதை முன் கூட்டியே உணர்த்தி விடுகின்றன. எனக்கும் கூட அப்படி நடந்திருக்கிறது. மணிமேகலைக்குப் பெயர் வைக்கும் விழா அன்று நான் வேறொரு பெயரைத் தான் வைக்க வேண்டமென்று பிடிவாதம் பிடித்தேன். ஆனால் கோவலர் கடலில் வசிக்கும் மணிமேகலா தெய்வம் என்னுடைய குல தெய்வம். அதன் பெயரை வைக்கலாம் என்றார். நான் அரை மனதுடன் சம்மதித்தேன். அன்று நள்ளிரவில் மணிமேகலா தெய்வம் என் கனவில் வந்து தோன்றி, ‘உன் மகள் தவச் செல்வியாகத் திகழ்வாள்என வாழ்த்தி மறைந்தது என்றபடியே மாதவி பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டாள்.
சுதமதி மாதவியிடம், ‘தெய்வங்கள் முன் கூட்டியே தெரிவித்து விடும் என்றால், என் விசயத்தில் ஏன் எந்தக் தெய்வமும் உதவவில்லை? என் வயதான தந்தையைப் பிரிந்து, மாருதவேகனால் ஏமாற்றப்பட்டு, இந்தப் புகார் நகரில் பிச்சையெடுத்து அலைந்து திரிந்தேனே? அப்போது தெய்வங்கள் எங்கே போயின?’ என்று கசப்புடன் கேட்டாள்.
சுதமதி வீணாக மனங் கலங்காதே. இந்த ஊர் தெய்வத்தின் அருளால் தான் நீ எங்களுடன் வந்து சேர்ந்திருக்கிறாய். நம் காவல் தெய்வமான சம்பாபதி தெய்வம் யாரையும் கைவிடமாட்டார். அவரை வணங்குஎன்றாள்.
மணிமேகலா தெய்வத்தைப் போன்றதா சம்பாபதி தெய்வம்?’ 
ஆம்.சுதமதி சம்பு என்ற பெண் தெய்வம், இந்த ஊரின் பழமையான காவல் தெய்வம். இந்த ஊருக்குக் காவிரிபூம்பட்டினம் என்ற பெயர் வருவதற்கு முன்பே சம்பு தெய்வத்தின் பெயரால்சம்பாபதிஎன்ற பெயரே நிலவி வந்தது. காவிரித்தாய்க்கு பாட்டி போன்றவள் இச்சம்பாபதி தெய்வம். காவிரி, இந்த ஊரை வளப்படுத்தியதால் தன் பெயரை விட்டுக்கொடுத்து காவிரித்தாய்க்குப் பெருமை சேர்க்கும் வகையில் காவிரிபூம்பட்டினம்என்ற பெயரை இந்த ஊருக்கு வைத்தவளே சம்பாபதி தெய்வம் தான்.‘ 
காவிரிப் பூம்பட்டினம் என்ற பெயர் வைப்பதற்கு முன்பு காவிரித்தாய் இந்த ஊரில் நடமாடவில்லையா
இல்லை சுதமதி அகத்தியர் தான், காந்தமன் என்ற சோழமன்னன் காலத்தில், காவிரித்தாயைச் சோழநாட்டிக்கு வரவழைத்தார். காவிரித்தாயிடம் சம்பாபதியை வணங்கச் சொல்லி, அவள் ஆசியுடன் சோழ நாட்டை வளமாக்கச் செய்தார்.
அம்மா நிறையத் தெரிந்த வைத்திருக்கிறீர்கள்’ ‘ஆம் சுதமதி நம் நாட்டின் வரலாற்றை நாம் தானே தெரிந்து வைத்திருக்க வேண்டும்?’ 
ஆம் தாயே நம் வரலாற்றை அறியாதவர்கள் தான் அந்நியமோகம் கொண்டு அலைவார்கள்.’ 
மாதவி மெல்லியதாகப் புன்னகைத்தாள்.[தொடரும்]