Wednesday 19 July 2017

மணிமேகலை.19

மணிமேகலை.19

தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி சேலம் -7- (தன்னாட்சி)
ஜவாஹர் பிரேமலதா

டற்கரையில் ஆர்ப்பரித்த கடல், இப்போது இந்த ஆழத்தில் தான் எவ்வளவு அமைதியாக இருக்கிறது. எப்படி கப்பலைத் தாலாட்டுகிறது. மனித மனமும் கரைகளை மோதி மோதி இறுதியில் பக்குவப்பட்டு நடுக்கடலைப் போல அமைதியாகி விடுகிறது.
குறைந்த கடலலை பேரிரைச்சலை ஏற்படுத்துவது  போல, அனுபவமற்ற மனமும் தான் எத்தனை கேள்விகளை எழுப்புகிறது. அனுபவம் நிறைந்த நடுக்கடலோ, கேள்வியற்று அமைதியாக இருக்கிறது. தான் இந்நிலையை எவ்வாறு எப்போது பெறுவது?
கடலலைகளைப் பார்த்தபடியே மணிமேகலை சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் பட்டாடையும், அடர்ந்த கூந்தலும் அவள் மனதைப் போலவே அலைபாய்ந்தன.
சிறுவயதில் பாட்டி   சித்திராபதியுடன் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறாள். மாதவி கோவலனுடன் மகிழ்ந்திருக்கும் நாள்களிளெல்லாம் சித்ராபதி அவளைக் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்கிறாள். தன்னொத்த தோழியருடன் விளையாடும் மணிமேகலை கடலில் தூரத்தில் தெரியும் படகுகளையும், நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கும் கப்பல்களையும் பார்த்திருக்கிறாள். அதில் பயணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டதை,காதில் வாங்காமல்  பாட்டி மறுத்துவிட்டாள்.
மீனவப் பெண்களின் கழுத்து மணி மாலைகளும், அவர்கள் மீது வீசும் புலால் வாசமும், கொச்சையான அவர்களின் பேச்சும் அவளுக்கு வேடிக்கையாக இருக்கும். படகுகளிலிருந்து மீன்களை அள்ளிக் கொண்டு வரும் மீனவர்களின் வியர்வை வடியும் உடலையும், உறுதியான பயமுறுத்தும் தோற்றத்தையும் கண்டு பாட்டியின் பின் ஒளிந்து கொள்வாள்.
மாதவியைப் போலவே மணிமேகலையும் பல கலைகளைக் கற்றிருந்தாள். மாதவியை விட அக் கலைகளில் மணிமேகலை சிறந்திருப்பதாகப் பலர் கூறக் கட்டிருக்கிறாள். ‘தலைக்கோலி’ பட்டத்தைப் பெற மணிமேகலையைத் தயார்ப்படுத்த  சித்ராபதி அவளைப் படாதபாடு படுத்தியிருக்கிறாள். ஆனால் கோவலன் உறுதியாக அவளை அரங்கேற்றம் செய்யக் கூடாது எனத் தடுத்து விட்டான்.
சித்ராபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 
கணிகையர்  வீதிக்கு அவள் ஒரு முடிசூடா ராணி. அவள் அனுமதியின்றி யாரும் எந்தக் கணிகையையும் நாட முடியாது. தொகையையும் அவளே தீர்மானிப்பாள். எப்போதும் அவள் மாளிகையில் அகிலின் நறுமணமும், குங்கிலியத்தின் நறும் புகையும், அத்தரின் மணமும் வீசிக் கொண்டிருக்கும். கடும்தேறல் ஜாடிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். பட்டாடை உடுத்தி கழுத்து நிறைய நகைகள், கைகளில் ஒலிக்கும் வளையல்கள், அள்ளிச் செருகிய கொண்டையில் முத்தாபரணங்கள் என எப்போதும் அலங்காரத்துடனே இருப்பாள். கணிகையர் குலப் பெண்களையும் அலங்கரித்துக் கொள்ளும்படி விரட்டியபடியே இருப்பாள். எப்போதும் அலங்கரித்துக் கொண்டு நறுமணத்துடனிருக்கும் கணிகையர் குலப் பெண்களுக்கும், வியர்வையையே அணிகலனாக நினைத்து உழைக்கும் மீனவப் பெண்களுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு.
மணிமேகலையை மிகவும் கவர்ந்தது அவர்களின் படகுப் பாட்டுதான். 
ஏலேலோ . . . . என்று ஆரம்பித்து கடலின் ஏற்ற இறக்கத்துக்குத் தக்கபடி, துடுப்பை போட்டு படகு விடும் அவர்களின் பாட்டைக் கேட்பதற்காகவே கடற்கரைக்குச் செல்ல ஆசைப்படுவாள்.
"பாட்டி நாமும் படகில் போகலாமா?"
‘போலாம். போலாம்’
"எப்போ  பாட்டி?" மணிமேகலை அவள் புடவைத் தலைப்பை இழுத்தபோதுதான் சுயநினைவிற்கு வந்தாள். கோவலன் நடன அரங்கேற்றத்திற்கு மணிமேகலையை அனுப்ப மறுத்ததிலிருந்தே அவள் சிந்தனை வயப்பட்டு விட்டாள்.
ஒவ்வொரு கணிகையின் திறமைக்கு ஏற்ப, அவள் நடனத்திற்கும், அவளுக்கும் விலையை நிர்ணயிப்பது அவள்தான். ஆணாக கணிகைக்  குலத்தில் பிறந்தவனுக்கு யாழிசைப் பயிற்றுவித்து, செல்வந்தர்களை எப்படி அணுக வேண்டுமென்று கற்றுக் கொடுத்து, அவர்களைக் கணிகை வீதிக்குக் கூட்டிவரும் வேலையை ஒப்படைப்பாள். 
பெண்ணாகப் பிறந்துவிட்டால், தக்க வயதில் நடன அரங்கேற்றம் நிகழ்த்தி மன்னன் மற்றும் செல்வந்தர்முன் ஆட விடுவாள். பெண்களின் இளமை உள்ளவரை தான் ஆடியும் பாடியும் பொருளீட்ட முடியும். ஆடவரை மகிழ்விக்கும் கலையைப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களை மகிழ்விப்பதைத் தவிர வேறு நினைவே அவர்களுக்கு எழாதவாறு செய்து விடுவாள். செருக்கும் செல்வாக்கும் உடைய சித்ராபதிக்குக் கோவலன் போக்கு புரிபடாமலிருந்தது.
இனிமேல் சித்ராபதியுடன் கடற்கரைக்குக் கூட கோவலன் மணிமேகலையை அனுப்புவது சந்தேகம் தான். கணிகை குலப் பெண்கள் உரிய காலத்தில் மணிமேகலைக்கு அரங்கேற்றம் நடத்தாததைப் பற்றி இப்போதே சாடை பேச ஆரம்பித்து விட்டார்கள்.
கோவலன் இறப்பும், மாதவியின் துறவும் அவளை இடிபோல் தாக்கி விட்டன.
கணிகைத்  தொழில் செய்ய முடியாது என்று செங்கல் சுமக்கச் சென்ற பெண்களை எப்படியெல்லாம் செல்வந்தர்களை ஏவி விட்டு மீண்டும் குலத் தொழிலுகே வரச் செய்தவள். இதனால், மாதவியின் அழுகை அவளுக்கு எரிச்சலையூட்டியது. ஒருவனுக்காக அழுவதை விட பலருக்காக சிரித்து வாழலாமே’ என்பது தான் அவள் எண்ணம்.
கணிகைகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள். 
'சித்ராபதி ஆட்டம் அவ்வளவுதான்’ 
‘சித்ராபதியின் மகள் துறவியாவதா?’
அவளுக்குள் கோபம் கனன்றது. பல முறை வசந்த மாலையை அனுப்பி விட்டாள். மாதவியின் உறுதியைக் குலைத்து விடுவதென வைராக்கியம் கொண்டாள். முடியாதென தெரிந்த கணத்தில் அவள் மனம் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. மணிமேகலை ஒரு ஒளிக் கீற்றாய் தெரிந்தாள். மணிமேகலையும் இப்போது கடல் தாண்டி அவள் கையைவிட்டு எங்கோ சென்று விட்டதை அவள் உள்ளம் ஏற்றுக் கொண்டிருக்குமா? [தொடரும்]
]

Tuesday 18 July 2017

மணிமேகலை.18

18. மணிமேகலை
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி சேலம் -7- (தன்னாட்சி)

டாக்டர். ஜவாஹர் பிரேமலதா
ஆபுத்திரனின்தாய்  சாலி என்ன ஆனாள்? வயதான கிழவருக்கு வாழ்க்கைப்பட்டு குழந்தையில்லாத அவர்களுக்கு ஒரு குழந்தை கருவாகி உருவாகிய சமயத்தில் சாலி களங்கப்படுத்தப்பட்டு துரத்தப்பட்டது மணிமேகலையின் மனதில் பெரும் பாரத்தை ஏற்படுத்தியது.
வயதான கிழவருக்கு ஏழ்மையின் காரணமாக மணமுடிக்கப்பட்டதே பெருங் கொடுமை. இதில் ஒழுக்கங் கெட்டவள் என்ற அவப்பெயர் வேறு. செய்யாத தவறுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை !அவளுக்கு மட்டுமல்ல. அவள் பெற்ற குழந்தைக்கும் இது தீராத் துயரத்தைத் தந்திருக்கிறது. இறுதிவரையில் சாலி மகனைப் பார்க்கவில்லை. மகனும் தாயைப் பார்க்கவில்லை.
ஒரு பெண் மீது எவ்வளவு எளிதாக களங்கம் சுமத்திவிடுகிறார்கள். இளவயதுப் பெண்ணை மணந்ததோடு அவளைச்  சந்தேகம் என்னும் நெருப்பிலும் தள்ளியிருக்கிறானே அவள் கணவன். 
பெண் ஒரு உடல் மட்டும்தானா? பிள்ளைப் பேற்றுக்காக மட்டும் தான் மனைவியா? சிறிதளவு கூட பெண் மீது நம்பிக்கையில்லையா? என்ன நடந்ததென்று கேட்க வேண்டாமா? 
உடனே நாட்டை விட்டுத் துரத்தி விடுவதா? இவர்கள் அன்பெல்லாம் இவ்வளவு தானா? வயிற்றில் சுமக்கும் கருவைக் கணவனிடம் சொல்ல முடியாத சாலி எப்படித் துடிதுடித்திருப்பாள்.
வயிற்றுப் பிள்ளையோடு வட நாட்டிலிருந்து தென்னாடு வரை நடந்தே சென்றிருக்கிறாளே. மாதவியையும் கோவலன் சந்தேகப்பட்டே தான் நீங்கினான். 
ஆனால் கணிகையான மாதவிக்கு வீடு இருந்தது. சொத்து இருந்தது. குலமகள் சாலிக்கு வீடுமில்லை. சொத்துமில்லை. சொந்தங்களும் துணையும்  இல்லை. ஒழுக்கங் கெட்டவள் என்ற அவப்பெயர் மட்டும் மிக எளிதாக கிடைத்திருக்கிறது. 
ஒழுக்கங் கெட்டவள் என்று துரத்தப்பட்ட சாலியின் மகன்தான் பசியால் வாடிய உயிர்களுக்கெல்லாம் தன் உணவையும் கொடுத்துப் பட்டினி கிடந்திருக்கிறான்.
சாவக நாட்டில் பட்டினியால் இறந்து மடியும்போது, உண்டு உயிரோடு இருப்பதா என அமுதசுரபி கையிலிருந்தும், உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்திருக்கிறான். ஒரு பசுவைக் காப்பாற்றப் போராடியிருக்கிறான். அதனால் வீட்டை விட்டே துரத்தப்பட்டிருக்கிறான். 
உண்மையில் யார் ஒழுக்கங் கெட்டவர்கள்?
சாலியா?
சாலியின் கணவனா?
ஆபுத்திரனா?
 பசுவை கொல்ல நினைத்த அந்தணர்களா?’
அவள் மனதில் கேள்விகளாக எழுந்து அவளை உறங்க விடாமல் துரத்தி யடித்துக் கொண்டிருந்தன.
‘சாவக நாட்டின் பசிப்பிணி நீக்க, அங்கேயே மறுபிறவி எடுத்த ஆபுத்திரனைச் சென்று பார்க்க வேண்டும். அவன் தானே அமுதசுரபிக்குச் சொந்தக்காரன்’
 மணிமேகலை பிடிவாதம் பிடித்தாள்.
மாதவியும் சுதமதியும் மணிமேகலையின் பிடிவாதத்தைக் கண்டு திகைத்தார்கள். ‘சாவக நாட்டிற்கா? கடல் கடந்து செல்லப் போகிறாயா? தனியாகவா? நீ இன்னும் உலகம்அறியாதவள். வேண்டாம் உன் பிடிவாதத்தைக் கைவிடு’
மணிமேகலை தன் கருத்தில் உறுதியாக இருந்தாள். ‘ஆபுத்திரனை வணங்கிய பின்பே அமுதசுரபியைப் பயன்படுத்துவேன்.’
அறவண அடிகள் அவளைச் சாவகத் தீவிற்குச் செல்லும் சில புத்த துறவிகளோடு அனுப்பி வைத்தார். மணிமேகலை புண்ணியராசனான ஆபுத்திரனைச் சந்தித்தாள். 
 மணிபல்லவத் தீவில் நடந்ததையும், அவன் முற்பிறவிக் கதையையும் தெரிவித்தாள்.
சாவக நாட்டு மக்களின் வளமான வாழ்வையும், புத்த துறவிகளின் வாழ்க்கை ஒழுங்குமுறையும் பெரிதும் அவளைக் கவர்ந்தன. பல மனிதர்களைச் சந்தித்தாள். பலரின் துயரக் கதைகள் புத்தத்தைத் தழுவிய பின் தூர விலகி ஓடியதைக் கேட்டாள். கப்பலில் பயணிக்கும்பொழுது புத்த துறவிகளின் ஒழுங்கமைப்பான வாழ்க்கை முறையைக் கண்டாள். சமத்துவத்தை உணர்ந்தாள். சுதந்திர உணர்வு பெற்றாள். அங்கு குலபேதமில்லை. எல்லோருக்கும் ஒரே உடை. ஒரே உணவு. சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் பெருநோக்கு. யாரும் அவளைக் கணிகையின் மகளாகப் பார்க்கவில்லை.
அனைவர் பார்வையிலும் கனிவு. அன்பு. சொற்களில் மரியாதை. புத்த துறவிகளோடு பழகிக் கிடைத்த இந்த வாய்ப்பு அவளுக்குள் பல உண்மைகளை உணர்த்தின. இது வேறு உலகம். இங்கு பெண் உடலாகப் பார்க்கப்படவில்லை. இந்த பயணம்தான் எவ்வளவு கற்றுக் கொடுத்தருக்கிறது. பெண்களை அறிவியலாகவே வைத்திருக்கத்தான் கடல்தாண்டி பெண்கள் பயணப்படக்கூடாதென்று சொன்னார்களோ? அப்பப்பா எத்தனை எதிர்ப்புகள். புத்த தருமம் பெண்களைக் கடல் தாண்டிச் செல்ல அனுமதிக்கும் என்று நன்க றிந்தபின்  பின்னர்தானே மாதவி அனுமதித்தாள்’. 
எல்லாவற்றிற்கும் வழிகாட்டியான  அறவண அடிகளின்  தாளை மனதில் வணங்கினாள்.[தொடரும்]

Monday 17 July 2017

மணிமேகலை .17

17. மணிமேகலை
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி


சேலம் -7- (தன்னாட்சி)
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா
ஆபுத்திரனின் உணவுக்கொடை  இந்திரனின் பதவியையே கேலிக்குள்ளாக்கியது. முதலில் துணுக்குற்றாலும்  இந்திரன் ஆபுத்திரனின் கருணை உள்ளத்தை வியந்தான். தனி ஒருவன் உலகைக் காக்க முற்பட்டதைப்போல ஆபுத்திரன் புறப்பட்டிருக்கிறான். அவனுடைய செயல் போற்றுதலுக்குரியது தான் . தெய்வத்தால் ஆகாததை, மெய் வருத்திக் கூலியாகப் பெற்றிருக்கிறான். அவனைப் பாராட்ட வேண்டுமென்று இந்திரன் நினைத்தான். ஆபுத்திரன் முன் தோன்றினான். 
" நான் தேவர் தலைவன்  இந்திரன்.ஆபுத்திரா! உன் செயல் பாராட்டுக்குரியது. இந்த ஊர் மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு நல் வாழ்வளித்திருக்கிறாய். சிந்தாதேவியின் மனதை கருணைக்கடலாக்கியிருக்கிறாய் . நீ உள்ள  ஊர் மக்களுக்கும் உனக்கும் எந்த தொடர்புமில்லை என்றாலும் அவர்களுக்காக  மனம் கசிந்திருக்கிறாய். உன்னை வாழ்த்துகிறேன். உன் புண்ணியத்தின் பலனை உனக்களிக்க விரும்புகிறேன். உன் கருணைக்கு பரிசளிக்கவே வந்தேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள். "
ஆபுத்திரன் இந்திரனை மேலும் கீழும் பார்த்தான். 
'நல்ல கொழுத்த தேகம். பட்டாடை. மின்னும் வைர வைடூரியங்களினால் ஆன தங்க நகைகள். எப்போதும் மாறாத புன்னகை. மக்களுக்கு மழை தராமல் அவர்களை வறியவர்களாக்கிய குற்ற உணர்வு சிறிதுமில்லை. ஆபுத்திரனின் கருணையைக் கண்டு சிந்தாதேவி இரங்கி பரிசளித்த போதும் இந்திரன் மழையைப் பெய்விக்கவில்லை. இதோ மக்களின் பசி தீர்ந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் மழையைப் பெய்விக்கவில்லை. இப்போது எனக்கு வரம் தருவதற்கு வந்திருக்கிறார்.' 
'மழையை வரமாகக் கேட்கலாம். ஆனால்அமுதசுரபி இருக்கையில் மழை கூட எதற்கு? இந்த நிலையில் கூட மழையைப் பெய்விக்க எண்ணாத கடவுளிடம் என்ன கேட்பது? மழையைத் தரமாட்டேன் என்று பிடிவாதமாக பனிரெண்டு ஆண்டுகள்......தனக்காக இந்திர விழா பல ஆண்டுகள் எடுத்த மக்கள், சில ஆண்டுகள் மறந்ததற்காக எவ்வளவு பெரிய தண்டனை?'ஆபுத்திரன் தனக்குள் சிரித்துக் கொண்டான். பிறகு தெளிவான குரலில் கூறினான்.
"இந்திரனே நீ தருவதாகக் கூறுகிற  வரங்களின் பலன்களை நான் உணவு தானம் செய்தபோதே பெற்றுவிட்டேன். கை நிறைய உணவு பெற்று, வயிறு நிறைய அதை உண்டு, மனம் நிறைந்து மக்கள் வாழ்த்திய போதே பெற்று விட்டேன். ஆனால், மக்களின் வாழ்த்திற்காகவும் புண்ணியத்திற்காகவும் நான் அவர்களின் பசியைக் போக்கவில்லை. உணவு உண்ட பொழுதில், பசி நீங்கிய அக்கணத்தில் அவர்கள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியைக் காணவே உணவு வழங்கினேன். இவர்கள் முகத்தில் தெரிந்த புன்னகையைக் கண்ட போதே நீ தரவுள்ள வரங்களின் பலன்களை நான் பெற்று விட்டதாக உணர்கிறேன். எனவே உன் வரங்கள் இனி எனக்கு தேவையில்லை"என்றான்.
இந்திரன் அவமானத்தினால் முகம் சிவந்தான். 
எப்போதும் ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் ஆணவத்தோடு இருப்பதைப் போலவே தோன்றுமல்லவா? இந்திரன், ஆபுத்திரனின் பதிலை ஆணவமாகக் கருதினான். அங்கிருந்து மறைந்தான். 
தன்னை மதிக்காத ஆபுத்திரனின் செருக்கை அடக்க நினைத்தான். அவனை இந்த ஊரை விட்டே துரத்திவிடத் துடித்தான்.  மக்கள் அவனை புறக்கணிக்கவேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம்?  நாட்டில் வளம் உண்டாக்கினால் யாரும் ஆபுத்திரனிடம் கையேந்த மாட்டார்கள்.  அதற்கு மக்களின் வறுமை போக வேண்டும். மழை ஒன்றுதான் அதற்கு ஒரே வழி. மழையைப் பெய்வித்தால் நாடு வளம் பெறும். முடிவு செய்தபடியே மழையைக் கொட்ட வைத்தான்.
அன்று இரவு மழை...மழை..... அப்படி ஒரு பெரு மழை. வானம் உடைந்து விட்டதைப் போல எங்கும் பெரு வெள்ளம். பட்ட மரங்கள் சிலிர்த்தன. 
ஆபுத்திரன் சிந்தா தேவி கோவிலிலிருந்து தெருவெங்கும் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. சிந்தாதேவியின் சிலையைப் பார்த்தான். அமுதசுரபி கொடுத்த நாளில் அத்தெய்வம் சொன்னது நினைவிற்கு வந்தது. ‘உன்னால் இங்கு மழை பொழியும்.‘ காதுகளெங்கும் மழையின் இரைச்சல். மின்னல் ...இடி....தொடர்ந்து பல நாட்கள் இரவெல்லாம் மழை பொழிந்தது.   
மண் குளிர்ந்தது. மக்களின் மனம் குளிர்ந்தது. ஆபுத்திரனும் பெரு மகிழ்வெய்தினான்.உணவு உண்டு தெம்பு பெற்றிருந்த மக்கள் கலப்பையைத் தோளில் ஏந்தி பூரிப்புடன் வயல் நோக்கிச் சென்றனர். எங்கும் உழைப்பவர்களின் ஆரவாரம். 'நான் முந்தி நீ முந்தி' என்று வயலில் இறங்கி உழுதார்கள். வேர்வை மழையை வயலுக்கு சீதனமாய்க் கொடுத்தார்கள். கோயில் கலசங்களிலிருந்து தானியங்கள் கொண்டு வரப்பட்டு வயலெங்கும் தூவப்பட்டது. பாலையாக கிடந்த நிலம் தன் இயல்பிற்குத் திரும்பியது.  நீரைத்தேடி பூமியின் மையப்பகுதி வரை சென்றிருந்த மரங்களின் வேர்கள் எதிர்பாராமல் கிடைத்த பெருமழையால்  திக்குமுக்காடின. வானத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக தன் கிளைக் கைகளால் செழித்த இலைகளையும் கொழுத்த பூக்களையும் பரிசாக வான் நோக்கி நீட்டின. கொழுத்த பழங்கள் சிரம் தாழ்த்தி தன்னைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டின. எங்கும் வண்ணச் சோலைகளால் அந்த ஊர் நிறைந்து காணப்பட்டது. பழைய நிலைக்கு ஊர் திரும்பி விட்டது. 
அனைவர் வீட்டிலும் தொழுவம். பசு, ஆடு,மாடு,கோழி என்று மக்கள் தம் வேலைகளில் மூழ்கி விட்டார்கள். 
வயல்கள்  விளைந்து கொட்டின. மூட்டை மூட்டையாக தானியங்களை மக்கள் அயலூருக்குக் கொண்டு விற்று பொன்னும் பொருளும் கொண்டு வந்தார்கள். இந்திரனுக்கு விழா சிறப்பாக செய்தார்கள். யாரும் ஆபுத்திரனிருக்கும் பக்கமே வரவில்லை. அவர்கள் அவனை மறந்தே போனார்கள். உணவிற்காக இரந்த நாட்களை நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கேளிக்கைகளில் மூழ்கிப் போனார்கள். 
ஆபுத்திரன் தனிமைப்படுத்தப்பட்டான் .தனித்துத் தவித்துப் போனான். யாரும் அவனை பொருட்டாகக் கருதவில்லை. அவனை அழைத்து உணவிடவும் யாரும் முன் வரவில்லை. அவனிடமே  அமுதசுரபி இருக்கிறதே! செல்வம் வந்ததும் அவர்களிடம் செல்வாக்கும் வந்துவிட்டது. இரந்து பிழைப்பதை இழிவாகக் கருதினார்கள். மானம் பெரிதென்று வாய்க்கு வாய் சொன்னார்கள். உழைப்பின் மேன்மையை ஊரைக் கூட்டி பொது மன்றத்தில் உரைத்தார்கள். 
ஆபுத்திரன் அமுதசுரபியைப் கையில் வைத்துக்கொண்டு முன்பு தன்னிடம் உணவு பெற்றவர்களை உணவு பெற அழைத்தான். 
"யாரடா இவன் ? எங்களைப் போய் உணவுன்ன அழைக்கிறான். இவன் பித்தன்தான். தினந்தோறும் விதம் விதமான உணவை உண்ணாமல் இவனிடமுள்ள ஒரே மாதிரியான உணவை யாராவது விரும்புவார்களா?" என்று கேலி பேசினார்கள். 
பைத்தியக்காரனைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள். இகழ்ச்சியாக சிரித்தார்கள். ஆபுத்திரன் இந்த ஊரில் தனக்கினி வேலையில்லை என நினைத்தான்.
 ஆபுத்திரன் பசிப்பிணி உள்ள நாட்டைத் தேடியலைந்தான். அந்த ஊருக்கு வந்தவர்கள் சொன்னதின் பேரில் சாவக நாட்டின் நிலையறிந்து கப்பலேறினான். 
ஓய்விற்காக மணி பல்லவத் தீவில் இறங்கிய கப்பலில் அவன் திரும்ப ஏறாததை யாரும் கவனிக்கவில்லை.
ஆபுத்திரன் தியானத்திலிருந்து எழுந்தபோது, அங்கு யாரும் இல்லை. கடற்கரைக்கு ஓடினான். தொலைவில் கப்பல் செல்வது சிறிது சிறிதாகத் தெரிந்தது. ‘ஐயோ இப்படியாகிவிட்டதே, சாவக மக்களின் பசியைப் போக்க இயலாதவன் ஆனேனே’ தினந்தோறும் ஒரு கப்பலில் வருகைக்காக்க் காத்திருந்தான். பன்னிரண்டு ஆண்டு கழிந்த நிலையில் வேறு வழியின்றி அமுதசுரபியைப் புத்த பீடிகைக்கு முன்னுள்ள கோமுகிப் பொய்கையில் விடுத்து, ‘உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தான். தான் செல்ல விரும்பிய சாவக நாட்டில் புண்ணிய ராசன் என்னும் அரசனாகப் பிறந்தான். அம்மக்களின் வறுமை போக்கி பெரும்புகழ் பெற்று வாழ்ந்து வருகிறான்.
மணிமேகலை ஆபுத்திரனின் கதையைக் கேட்டு வியந்தாள். ஆபுத்திரனின் கதையைத் திரும்ப திரும்ப சிந்தித்துக் கொண்டிருந்தாள்.[தொடரும்]

Sunday 16 July 2017

மணிமேகலை.16.

16.   மணிமேகலை 
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி


சேலம் -7- (தன்னாட்சி)
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா
 ஆபுத்திரனின் கருணை உள்ளம் அமுதசுரபியின் வரவினால் குளிர்ந்ததைப் போல அந்த ஊர் மக்களின் வயிறும் குளிர்ந்ததுஎங்கும் மக்கள் அவனை மொய்த்துக் கொண்டார்கள்அவன் பெயர் அயல் நாடுகளிலும்  பரவியது.  அவனை நாடிப்  பலர் வந்தார்கள்அமுதசுரபியின் வற்றாத வளம் வறுமையைப் போக்கியதுபசிப்பிணி போக்கும் மருத்துவனானான் அவனுடைய புகழ் வானுலகையும் எட்டியதுஇந்திரனும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்ஆபுத்திரனின் கருணை உள்ளத்திற்கு  சிந்தாதேவி பரிசளித்தது
மக்கள் பசி நீங்கி ஆனந்தம் அடைந்தது. அவன் ஒரு கடவுளாகவே போற்றப்பட்டான் ஆனால் சிறிதளவும்  அவனிடம் ஆணவமில்லைஅவனிடம் என்றும் மாறாத இரக்கமே நிலைத்திருந்ததுதன்னை மக்கள் வணங்குவதை அவன் விரும்பவில்லைஅவனை வணங்கவேண்டுமென்பதற்காகவா அமுதசுரபியிலிருந்து பெருகிய உணவை அவன் வழங்கிக் கொண்டிருந்தான்இல்லை இல்லைஎங்கும் பசி என்ற ஒரு பெருநோய் மீண்டும் தோன்றாமலிருக்கவேண்டும் என்றே அவன் பாடுபட்டுக்கொண்டிருந்தான்.
புசித்தவருக்கு எப்படி பசியின்  கொடுமை தெரியும்   பசியின் கொடுமை பசித்தவருக்கே புரியும்! 
ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அவன் அறிவான். இந்த ஊருக்கு வந்த நாள் முதலாய் பசியின் கொடுமையை அவன் சந்தித்தவன்..அனுபவித்தவான். இதுவரை அவன் இப்படிப்பட்ட கொடுமையைச் சந்தித்ததில்லை. பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது! ஒட்டிய வயிறும் உப்பிய தேகமும் துருத்திய எலும்பும் அவர்களோடு ஒட்டிப்பிறந்த வாழ்க்கைச் சரித்திரமாகியிருப்பதைக் கண்டான். பஞ்சமும் பட்டினியும் பட்டிமன்றம் நடத்த அந்த நாட்டில் வெற்றி எப்போதும் மரணத்துக்குத்தான்!
ஆபுத்திரன் அந்த ஊருக்கு வந்த புதிதில், ஒரு இளைஞன் ஒட்டி உலர்ந்த இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
‘வாய்க்கு ருசியாய் எனக்கு எதுவும் தேவையில்லை;வகைவகையாய் ஏதும் நான் கேட்டிடவில்லை. ஒரு சொட்டுக் கஞ்சி கடைத்தால் போதுமெனக்கு.‘
அவன் கூறியதின் பொருளை வரும் நாட்களிலேயே ஆபுத்திரன் உணர்ந்து கொண்டான்.
எலும்பும் தோலுமாய் ஆனது அவனுடைய தேகமும். உலகம் அவனைத் துறந்தது போல் சதையும் சட்டென்று அவனை விட்டு விலகிக் கொண்டது! எனினும் அவன் அந்த ஊரை விட்டு விலகவில்லை. இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கினான். அனாதையான அவனுக்கு உறவுகள் தேவை. இந்த ஊர் மக்களின் வறுமையைப் போக்கியாவது, இந்த ஊர் மக்களைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். தன் சொந்த ஊராகவே அந்த ஊரைக் கருதத் தொடங்கினான். ஆனால் வழிதான் தெரியவில்லை.
பசிக் கொடுமை அவன் உடலை அரிக்க அரிக்க.....
  நடமாடும் குச்சியாய் அவனும் தேய்ந்து போனான். ஏதோஒரு நம்பிக்கையில் அவன் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருந்தன. 
தாளாத பசி சதையைத் தின்றொழிக்க வழியறியாது திகைத்தான்.
எலும்பாவது மிஞ்சட்டுமே என பாவப்பட்டு எலும்பை மூடிக் கொண்டிருந்தது தோல். ஆறடி உயரமிருந்த அவனிடம்  கோழியின்  அளவுகூட சதையில்லை.
அந்த ஊர் மக்களைப் போல அவனும் ஒரு உயிருள்ள எழும்புக் கூடு!!
சுடுமணலில் காய்ந்த கருவாடாய் அவனும் உருமாறிப் போயிருந்தான்.
கிள்ளுவதற்கும் குத்துவதற்கும் கூட அவனுடலில் இடமில்லை!
அந்நாட்டைப் பஞ்சம் துரத்தித் துரத்தி கொல்ல, அம்மக்களையோ
பட்டினி பாய்ந்து பாய்ந்து குதறிற்று! எந்த நாடும் அம்மக்களைக் கண்டு இரங்கவில்லை. அண்டை நாடு வளம் கொழித்துக் கொண்டிருந்தது. இது எதிரி நாடாயிற்றே. இம்மக்கள் எப்படிப் போனால் என்ன?
பசி வெள்ளம் அவனையும் அடித்துச் சென்று கொண்டிருந்தது. பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம் என்பதை அம்மக்களின் குணக் கேட்டில் கண்டு கொண்டான்.
கிடைத்ததை யாரும் பகிர்ந்து கொள்ளவில்லை. எங்கும் இரப்பின், இறப்பின் அவலக் குரல்!  பசிக்கொடுமை அவன் குரலையும் கொஞ்சம் கொஞ்சமாய் குடித்து விட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் ஏதோ கிடைத்ததைப் பலருக்குக் கொடுத்துத் தானும் பட்டினி கிடந்தான்.!
காக்கை குருவி கூட எதையோ தின்று எப்படியோ பிழைத்து விடுகிறது. 
மனிதன் மட்டும் தான் பசியினால் இறக்கிறான். 
  உயிர்  பசியால் போதல் தீது என்று எப்போதறியும் இந்த உலகம்
 எங்கோ ஓருயிர் பசியால் செத்து, இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரையும் கொலைக்குக்  காரணமாக்குவதை எப்படியறியும்? இராப்பகல் சிந்தித்து மாய்ந்து போனான்அவனுடைய கருணை மாறா உள்ளத்தை அறிந்து சிந்தா தேவிசிந்தித்ததினால் அவனுக்கு உதவ முன் வந்ததுஅமுதசுரபியைப் பெற்ற நாள் முதல் அவன் அடைந்த இன்பங்களுக்கு அளவேயில்லைதருமங்களில் உயர்ந்தது உணவுதானமே என்பதை கண்கூடாகக் கண்டான். உணவு பெற்றவர்கள் வயிராற உண்டார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்றார்கள். சுற்றத்தையும் அழைத்து வந்தார்கள்.
பார்ப்பவரிடமெல்லாம் ஆபுத்திரனிடம் செல்லும்படி வழி காட்டினார்கள். ஆபுத்திரன் வில நாட்களிலேயே ஒன்றை உணர்ந்து கொண்டான். பணம்காசுநகைபூமிவீடு இதைப் போல்  எவ்வளவு கொடுத்தாலும் அதை வாங்கிக் கொள்கிறவன் போதும் என்று சொல்வதில்லை. 
அதற்குமேல் எவ்வளவு தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். உணவு போடுகிற போதுதான் என்னதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும்ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாத நிலையில் போதும் என்கிறான். மேலும் மேலும் அளவுக்கு மேல் உணவு கொடுக்க முற்பட்டால் போய்ஐயையோ! இனிமேல் போடாதீர்கள்” என்று மன்றாடவே செய்கிறான். சிறிது நாட்களிலேயே அம்மக்களின் பஞ்சடைந்த கண்கள் கண்ணொளி பெற்றன. உடலில் சதை தெரிய ஆரம்பித்தது. நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து காப்பது உணவு ஒன்று தான் என்பதை ஆபுத்திரன் அறிந்தான்..
கண்முன்பாகவே ஒருவன் வயிறார உண்டு மகிழ்வதையும், ஆனந்திப்பதையும், பலரையும் உணவுன்ன அழைப்பதையும் ஆபுத்திரன் கண்டான். சிலநாட்களிலேயே அங்கு அருளும்அன்பும் தழைத்தோங்கியது. [தொடரும்]