Tuesday 18 July 2017

மணிமேகலை.18

18. மணிமேகலை
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி சேலம் -7- (தன்னாட்சி)

டாக்டர். ஜவாஹர் பிரேமலதா
ஆபுத்திரனின்தாய்  சாலி என்ன ஆனாள்? வயதான கிழவருக்கு வாழ்க்கைப்பட்டு குழந்தையில்லாத அவர்களுக்கு ஒரு குழந்தை கருவாகி உருவாகிய சமயத்தில் சாலி களங்கப்படுத்தப்பட்டு துரத்தப்பட்டது மணிமேகலையின் மனதில் பெரும் பாரத்தை ஏற்படுத்தியது.
வயதான கிழவருக்கு ஏழ்மையின் காரணமாக மணமுடிக்கப்பட்டதே பெருங் கொடுமை. இதில் ஒழுக்கங் கெட்டவள் என்ற அவப்பெயர் வேறு. செய்யாத தவறுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை !அவளுக்கு மட்டுமல்ல. அவள் பெற்ற குழந்தைக்கும் இது தீராத் துயரத்தைத் தந்திருக்கிறது. இறுதிவரையில் சாலி மகனைப் பார்க்கவில்லை. மகனும் தாயைப் பார்க்கவில்லை.
ஒரு பெண் மீது எவ்வளவு எளிதாக களங்கம் சுமத்திவிடுகிறார்கள். இளவயதுப் பெண்ணை மணந்ததோடு அவளைச்  சந்தேகம் என்னும் நெருப்பிலும் தள்ளியிருக்கிறானே அவள் கணவன். 
பெண் ஒரு உடல் மட்டும்தானா? பிள்ளைப் பேற்றுக்காக மட்டும் தான் மனைவியா? சிறிதளவு கூட பெண் மீது நம்பிக்கையில்லையா? என்ன நடந்ததென்று கேட்க வேண்டாமா? 
உடனே நாட்டை விட்டுத் துரத்தி விடுவதா? இவர்கள் அன்பெல்லாம் இவ்வளவு தானா? வயிற்றில் சுமக்கும் கருவைக் கணவனிடம் சொல்ல முடியாத சாலி எப்படித் துடிதுடித்திருப்பாள்.
வயிற்றுப் பிள்ளையோடு வட நாட்டிலிருந்து தென்னாடு வரை நடந்தே சென்றிருக்கிறாளே. மாதவியையும் கோவலன் சந்தேகப்பட்டே தான் நீங்கினான். 
ஆனால் கணிகையான மாதவிக்கு வீடு இருந்தது. சொத்து இருந்தது. குலமகள் சாலிக்கு வீடுமில்லை. சொத்துமில்லை. சொந்தங்களும் துணையும்  இல்லை. ஒழுக்கங் கெட்டவள் என்ற அவப்பெயர் மட்டும் மிக எளிதாக கிடைத்திருக்கிறது. 
ஒழுக்கங் கெட்டவள் என்று துரத்தப்பட்ட சாலியின் மகன்தான் பசியால் வாடிய உயிர்களுக்கெல்லாம் தன் உணவையும் கொடுத்துப் பட்டினி கிடந்திருக்கிறான்.
சாவக நாட்டில் பட்டினியால் இறந்து மடியும்போது, உண்டு உயிரோடு இருப்பதா என அமுதசுரபி கையிலிருந்தும், உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்திருக்கிறான். ஒரு பசுவைக் காப்பாற்றப் போராடியிருக்கிறான். அதனால் வீட்டை விட்டே துரத்தப்பட்டிருக்கிறான். 
உண்மையில் யார் ஒழுக்கங் கெட்டவர்கள்?
சாலியா?
சாலியின் கணவனா?
ஆபுத்திரனா?
 பசுவை கொல்ல நினைத்த அந்தணர்களா?’
அவள் மனதில் கேள்விகளாக எழுந்து அவளை உறங்க விடாமல் துரத்தி யடித்துக் கொண்டிருந்தன.
‘சாவக நாட்டின் பசிப்பிணி நீக்க, அங்கேயே மறுபிறவி எடுத்த ஆபுத்திரனைச் சென்று பார்க்க வேண்டும். அவன் தானே அமுதசுரபிக்குச் சொந்தக்காரன்’
 மணிமேகலை பிடிவாதம் பிடித்தாள்.
மாதவியும் சுதமதியும் மணிமேகலையின் பிடிவாதத்தைக் கண்டு திகைத்தார்கள். ‘சாவக நாட்டிற்கா? கடல் கடந்து செல்லப் போகிறாயா? தனியாகவா? நீ இன்னும் உலகம்அறியாதவள். வேண்டாம் உன் பிடிவாதத்தைக் கைவிடு’
மணிமேகலை தன் கருத்தில் உறுதியாக இருந்தாள். ‘ஆபுத்திரனை வணங்கிய பின்பே அமுதசுரபியைப் பயன்படுத்துவேன்.’
அறவண அடிகள் அவளைச் சாவகத் தீவிற்குச் செல்லும் சில புத்த துறவிகளோடு அனுப்பி வைத்தார். மணிமேகலை புண்ணியராசனான ஆபுத்திரனைச் சந்தித்தாள். 
 மணிபல்லவத் தீவில் நடந்ததையும், அவன் முற்பிறவிக் கதையையும் தெரிவித்தாள்.
சாவக நாட்டு மக்களின் வளமான வாழ்வையும், புத்த துறவிகளின் வாழ்க்கை ஒழுங்குமுறையும் பெரிதும் அவளைக் கவர்ந்தன. பல மனிதர்களைச் சந்தித்தாள். பலரின் துயரக் கதைகள் புத்தத்தைத் தழுவிய பின் தூர விலகி ஓடியதைக் கேட்டாள். கப்பலில் பயணிக்கும்பொழுது புத்த துறவிகளின் ஒழுங்கமைப்பான வாழ்க்கை முறையைக் கண்டாள். சமத்துவத்தை உணர்ந்தாள். சுதந்திர உணர்வு பெற்றாள். அங்கு குலபேதமில்லை. எல்லோருக்கும் ஒரே உடை. ஒரே உணவு. சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் பெருநோக்கு. யாரும் அவளைக் கணிகையின் மகளாகப் பார்க்கவில்லை.
அனைவர் பார்வையிலும் கனிவு. அன்பு. சொற்களில் மரியாதை. புத்த துறவிகளோடு பழகிக் கிடைத்த இந்த வாய்ப்பு அவளுக்குள் பல உண்மைகளை உணர்த்தின. இது வேறு உலகம். இங்கு பெண் உடலாகப் பார்க்கப்படவில்லை. இந்த பயணம்தான் எவ்வளவு கற்றுக் கொடுத்தருக்கிறது. பெண்களை அறிவியலாகவே வைத்திருக்கத்தான் கடல்தாண்டி பெண்கள் பயணப்படக்கூடாதென்று சொன்னார்களோ? அப்பப்பா எத்தனை எதிர்ப்புகள். புத்த தருமம் பெண்களைக் கடல் தாண்டிச் செல்ல அனுமதிக்கும் என்று நன்க றிந்தபின்  பின்னர்தானே மாதவி அனுமதித்தாள்’. 
எல்லாவற்றிற்கும் வழிகாட்டியான  அறவண அடிகளின்  தாளை மனதில் வணங்கினாள்.[தொடரும்]

No comments:

Post a Comment