Sunday 16 July 2017

மணிமேகலை.16.

16.   மணிமேகலை 
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி


சேலம் -7- (தன்னாட்சி)
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா
 ஆபுத்திரனின் கருணை உள்ளம் அமுதசுரபியின் வரவினால் குளிர்ந்ததைப் போல அந்த ஊர் மக்களின் வயிறும் குளிர்ந்ததுஎங்கும் மக்கள் அவனை மொய்த்துக் கொண்டார்கள்அவன் பெயர் அயல் நாடுகளிலும்  பரவியது.  அவனை நாடிப்  பலர் வந்தார்கள்அமுதசுரபியின் வற்றாத வளம் வறுமையைப் போக்கியதுபசிப்பிணி போக்கும் மருத்துவனானான் அவனுடைய புகழ் வானுலகையும் எட்டியதுஇந்திரனும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்ஆபுத்திரனின் கருணை உள்ளத்திற்கு  சிந்தாதேவி பரிசளித்தது
மக்கள் பசி நீங்கி ஆனந்தம் அடைந்தது. அவன் ஒரு கடவுளாகவே போற்றப்பட்டான் ஆனால் சிறிதளவும்  அவனிடம் ஆணவமில்லைஅவனிடம் என்றும் மாறாத இரக்கமே நிலைத்திருந்ததுதன்னை மக்கள் வணங்குவதை அவன் விரும்பவில்லைஅவனை வணங்கவேண்டுமென்பதற்காகவா அமுதசுரபியிலிருந்து பெருகிய உணவை அவன் வழங்கிக் கொண்டிருந்தான்இல்லை இல்லைஎங்கும் பசி என்ற ஒரு பெருநோய் மீண்டும் தோன்றாமலிருக்கவேண்டும் என்றே அவன் பாடுபட்டுக்கொண்டிருந்தான்.
புசித்தவருக்கு எப்படி பசியின்  கொடுமை தெரியும்   பசியின் கொடுமை பசித்தவருக்கே புரியும்! 
ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அவன் அறிவான். இந்த ஊருக்கு வந்த நாள் முதலாய் பசியின் கொடுமையை அவன் சந்தித்தவன்..அனுபவித்தவான். இதுவரை அவன் இப்படிப்பட்ட கொடுமையைச் சந்தித்ததில்லை. பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது! ஒட்டிய வயிறும் உப்பிய தேகமும் துருத்திய எலும்பும் அவர்களோடு ஒட்டிப்பிறந்த வாழ்க்கைச் சரித்திரமாகியிருப்பதைக் கண்டான். பஞ்சமும் பட்டினியும் பட்டிமன்றம் நடத்த அந்த நாட்டில் வெற்றி எப்போதும் மரணத்துக்குத்தான்!
ஆபுத்திரன் அந்த ஊருக்கு வந்த புதிதில், ஒரு இளைஞன் ஒட்டி உலர்ந்த இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
‘வாய்க்கு ருசியாய் எனக்கு எதுவும் தேவையில்லை;வகைவகையாய் ஏதும் நான் கேட்டிடவில்லை. ஒரு சொட்டுக் கஞ்சி கடைத்தால் போதுமெனக்கு.‘
அவன் கூறியதின் பொருளை வரும் நாட்களிலேயே ஆபுத்திரன் உணர்ந்து கொண்டான்.
எலும்பும் தோலுமாய் ஆனது அவனுடைய தேகமும். உலகம் அவனைத் துறந்தது போல் சதையும் சட்டென்று அவனை விட்டு விலகிக் கொண்டது! எனினும் அவன் அந்த ஊரை விட்டு விலகவில்லை. இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கினான். அனாதையான அவனுக்கு உறவுகள் தேவை. இந்த ஊர் மக்களின் வறுமையைப் போக்கியாவது, இந்த ஊர் மக்களைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். தன் சொந்த ஊராகவே அந்த ஊரைக் கருதத் தொடங்கினான். ஆனால் வழிதான் தெரியவில்லை.
பசிக் கொடுமை அவன் உடலை அரிக்க அரிக்க.....
  நடமாடும் குச்சியாய் அவனும் தேய்ந்து போனான். ஏதோஒரு நம்பிக்கையில் அவன் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருந்தன. 
தாளாத பசி சதையைத் தின்றொழிக்க வழியறியாது திகைத்தான்.
எலும்பாவது மிஞ்சட்டுமே என பாவப்பட்டு எலும்பை மூடிக் கொண்டிருந்தது தோல். ஆறடி உயரமிருந்த அவனிடம்  கோழியின்  அளவுகூட சதையில்லை.
அந்த ஊர் மக்களைப் போல அவனும் ஒரு உயிருள்ள எழும்புக் கூடு!!
சுடுமணலில் காய்ந்த கருவாடாய் அவனும் உருமாறிப் போயிருந்தான்.
கிள்ளுவதற்கும் குத்துவதற்கும் கூட அவனுடலில் இடமில்லை!
அந்நாட்டைப் பஞ்சம் துரத்தித் துரத்தி கொல்ல, அம்மக்களையோ
பட்டினி பாய்ந்து பாய்ந்து குதறிற்று! எந்த நாடும் அம்மக்களைக் கண்டு இரங்கவில்லை. அண்டை நாடு வளம் கொழித்துக் கொண்டிருந்தது. இது எதிரி நாடாயிற்றே. இம்மக்கள் எப்படிப் போனால் என்ன?
பசி வெள்ளம் அவனையும் அடித்துச் சென்று கொண்டிருந்தது. பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம் என்பதை அம்மக்களின் குணக் கேட்டில் கண்டு கொண்டான்.
கிடைத்ததை யாரும் பகிர்ந்து கொள்ளவில்லை. எங்கும் இரப்பின், இறப்பின் அவலக் குரல்!  பசிக்கொடுமை அவன் குரலையும் கொஞ்சம் கொஞ்சமாய் குடித்து விட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் ஏதோ கிடைத்ததைப் பலருக்குக் கொடுத்துத் தானும் பட்டினி கிடந்தான்.!
காக்கை குருவி கூட எதையோ தின்று எப்படியோ பிழைத்து விடுகிறது. 
மனிதன் மட்டும் தான் பசியினால் இறக்கிறான். 
  உயிர்  பசியால் போதல் தீது என்று எப்போதறியும் இந்த உலகம்
 எங்கோ ஓருயிர் பசியால் செத்து, இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரையும் கொலைக்குக்  காரணமாக்குவதை எப்படியறியும்? இராப்பகல் சிந்தித்து மாய்ந்து போனான்அவனுடைய கருணை மாறா உள்ளத்தை அறிந்து சிந்தா தேவிசிந்தித்ததினால் அவனுக்கு உதவ முன் வந்ததுஅமுதசுரபியைப் பெற்ற நாள் முதல் அவன் அடைந்த இன்பங்களுக்கு அளவேயில்லைதருமங்களில் உயர்ந்தது உணவுதானமே என்பதை கண்கூடாகக் கண்டான். உணவு பெற்றவர்கள் வயிராற உண்டார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்றார்கள். சுற்றத்தையும் அழைத்து வந்தார்கள்.
பார்ப்பவரிடமெல்லாம் ஆபுத்திரனிடம் செல்லும்படி வழி காட்டினார்கள். ஆபுத்திரன் வில நாட்களிலேயே ஒன்றை உணர்ந்து கொண்டான். பணம்காசுநகைபூமிவீடு இதைப் போல்  எவ்வளவு கொடுத்தாலும் அதை வாங்கிக் கொள்கிறவன் போதும் என்று சொல்வதில்லை. 
அதற்குமேல் எவ்வளவு தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். உணவு போடுகிற போதுதான் என்னதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும்ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாத நிலையில் போதும் என்கிறான். மேலும் மேலும் அளவுக்கு மேல் உணவு கொடுக்க முற்பட்டால் போய்ஐயையோ! இனிமேல் போடாதீர்கள்” என்று மன்றாடவே செய்கிறான். சிறிது நாட்களிலேயே அம்மக்களின் பஞ்சடைந்த கண்கள் கண்ணொளி பெற்றன. உடலில் சதை தெரிய ஆரம்பித்தது. நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து காப்பது உணவு ஒன்று தான் என்பதை ஆபுத்திரன் அறிந்தான்..
கண்முன்பாகவே ஒருவன் வயிறார உண்டு மகிழ்வதையும், ஆனந்திப்பதையும், பலரையும் உணவுன்ன அழைப்பதையும் ஆபுத்திரன் கண்டான். சிலநாட்களிலேயே அங்கு அருளும்அன்பும் தழைத்தோங்கியது. [தொடரும்]

No comments:

Post a Comment